- 1 : தீர்க்கதரிசிகளுடைய புத்திரரில் ஒருவனுக்கு மனைவியாயிருந்த ஒரு ஸ்திரீ எலிசாவைப் பார்த்து: உமது அடியானாகிய என் புருஷன் இறந்து போனான்; உமது அடியான் கர்த்தருக்குப் பயந்து நடந்தான் என்பதை அறிவீர்; கடன்கொடுத்தவன் இப்போது என் இரண்டு குமாரரையும் தனக்கு அடிமைகளாக்கிக்கொள்ள வந்தான் என்றாள்.
- 2 : எலிசா அவளை நோக்கி: நான் உனக்கு என்னசெய்யவேண்டும்? வீட்டில் உன்னிடத்தில் என்ன இருக்கிறது சொல் என்றான். அதற்கு அவள்: ஒரு குடம் எண்ணெய் அல்லாமல் உமது அடியாளுடைய வீட்டில் வேறொன்றும் இல்லை என்றாள்.
- 3 : அப்பொழுது அவன்: நீ போய், உன்னுடைய அயல்வீட்டுக்காரர் எல்லாரிடத்திலும் அநேகம் வெறும்பாத்திரங்களைக் கேட்டுவாங்கி,
- 4 : உள்ளே போய், உன் பிள்ளைகளுடன் உள்ளே நின்று கதவைப் பூட்டி, அந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றிலும் வார்த்து, நிறைந்ததை ஒரு பக்கத்தில் வை என்றான்.
- 5 : அவள் அவனிடத்திலிருந்து போய், தன் பிள்ளைகளுடன் கதவைப்பூட்டிக்கொண்டு, இவர்கள் பாத்திரங்களை அவளிடத்தில் கொடுக்க, அவள் அவைகளில் வார்த்தாள்.
- 6 : அந்தப் பாத்திரங்கள் நிறைந்தபின், அவள் தன் மகன் ஒருவனை நோக்கி: இன்னும் ஒரு பாத்திரம் கொண்டுவா என்றாள். அதற்கு அவன்: வேறே பாத்திரம் இல்லை என்றான்; அப்பொழுது எண்ணெய் நின்றுபோயிற்று.
- 7 : அவள் போய் தேவனுடைய மனுஷனுக்கு அதை அறிவித்தாள். அப்பொழுது அவன்: நீ போய் அந்த எண்ணையை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீந்ததைக்கொண்டு நீயும் உன் பிள்ளைகளும் ஜீவனம்பண்ணுங்கள் என்றான்.
- 8 : பின்பு ஒருநாள் எலிசா சூனேமுக்குப் போயிருக்கும்போது, அங்கேயிருந்த கனம்பொருந்திய ஒரு ஸ்திரீ அவனைப் போஜனம்பண்ண வருந்திக்கேட்டுக்கொண்டாள்; அப்படியே அவன் பயணப்பட்டு வருகிறபோதெல்லாம் போஜனம்பண்ணும்படி அங்கே வந்து தங்குவான்.
- 9 : அவள் தன் புருஷனை நோக்கி: இதோ, நம்மிடத்தில் எப்போதும் வந்துபோகிற தேவனுடைய மனுஷனாகிய இவர் பரிசுத்தவான் என்று காண்கிறேன்.
- 10 : நாம் மெத்தையின்மேல் ஒரு சிறிய அறைவீட்டைக் கட்டி, அதில் அவருக்கு ஒரு கட்டிலையும், மேஜையையும், நாற்காலியையும், குத்துவிளக்கையும் வைப்போம்; அவர் நம்மிடத்தில் வரும்போது அங்கே தங்கலாம் என்றாள்.
- 11 : ஒருநாள் அவன் அங்கே வந்து, அந்த அறைவீட்டிலே தங்கி, அங்கே படுத்துக்கொண்டிருந்தான்.
- 12 : அவன் தன் வேலைக்காரனாகிய கேயாசை நோக்கி: இந்தச் சூனேமியாளை அழைத்துக்கொண்டு வா என்றான்; அவளை அழைத்துக்கொண்டு வந்தான்; அவள் அவனுக்குமுன்பாக நின்றாள்.
- 13 : அவன் கேயாசியைப் பார்த்து : இதோ, இப்படிப்பட்ட சகல சலக்கரணையோடும் எங்களை விசாரித்து வருகிறாயே, உனக்கு நான் என்ன செய்யவேண்டும்? ராஜாவினிடத்திலாவது சேனாபதியினிடத்திலாவது உனக்காக நான் பேசவேண்டிய காரியம் உண்டோ என்று அவளைக் கேள் என்றான். அதற்கு அவள்: என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன் என்றாள்.
- 14 : அவளுக்குச் செய்யவேண்டியது என்னவென்று கேயாசியை அவன் கேட்டதற்கு; அவன், அவளுக்குப் பிள்ளை இல்லை, அவள் புருஷனும் பெரிய வயதுள்ளவன் என்றான்.
- 15 : அப்பொழுது அவன்: அவளைக் கூப்பிடு என்றான்; அவளைக் கூப்பிட்டபோது, அவள் வந்து வாசற்படியிலே நின்றாள்.
- 16 : அப்பொழுது அவன்: ஒரு பிராண உற்பத்திகாலத்திட்டத்திலே ஒரு குமாரனை அணைத்துக்கொண்டிருப்பாய் என்றான். அதற்கு அவள்: ஏது? தேவனுடைய மனுஷனாகிய என் ஆண்டவனே, உமது அடியாளுக்கு அபத்தம் சொல்லவேண்டாம் என்றாள்.
- 17 : அந்த ஸ்திரீ கர்ப்பந்தரித்து, எலிசா தன்னோடே சொன்னபடி, ஒரு உற்பத்திகாலத்திட்டத்தில் ஒரு குமாரனைப் பெற்றாள்.
- 18 : அந்தப் பிள்ளை வளர்ந்தான், ஒரு நாள் அவன் அறுப்பறுக்கிறவர்களிடத்திலிருந்த தன் தகப்பனண்டைக்குப் போயிருக்கும்போது,
- 19 : தன் தகப்பனைப் பார்த்து: என் தலை நோகிறது, என் தலை நோகிறது என்றான்; அப்பொழுது அவன் வேலைக்காரனிடத்தில், இவனை இவன் தாயினிடத்தில் எடுத்துக்கொண்டுபோய்விடு என்றான்.
- 20 : அவனை எடுத்து, அவன் தாயினிடத்தில் கொண்டுபோனபோது, அவன் மத்தியானமட்டும் அவள் மடியில் இருந்து செத்துப்போனான்.
- 21 : அப்பொழுது அவள் ஏறிப்போய், அவனை தேவனுடைய மனுஷன் கட்டிலின்மேல் வைத்து, அவன் வைக்கப்பட்ட அறையின் கதவைப் பூட்டிக்கொண்டுபோய்,
- 22 : தன் புருஷனிடத்தில் ஆள் அனுப்பி: நான் சீக்கிரமாய் தேவனுடைய மனுஷன் இருக்கும் இடமட்டும் போய்வரும்படிக்கு, வேலைக்காரரில் ஒருவனையும் ஒரு கழுதையையும் எனக்கு அனுப்பவேண்டும் என்று சொல்லச்சொன்னாள்.
- 23 : அப்பொழுது அவன்: இது அமாவாசியும் அல்ல, ஓய்வுநாளும் அல்லவே; நீ இன்றைக்கு அவரிடத்துக்குப் போகவேண்டியது என்ன என்று கேட்கச்சொன்னான். அதற்கு அவள்: எல்லாம் சரிதான், நான் போகவேண்டியிருக்கிறது என்று சொல்லியனுப்பி,
- 24 : கழுதையின்மேல் சேணம்வைத்து ஏறி, தன் வேலைக்காரனை நோக்கி: இதை ஓட்டிக்கொண்டுபோ; நான் உனக்குச் சொன்னால் ஒழிய போகிற வழியில் எங்கும் ஓட்டத்தை நிறுத்தாதே என்று சொல்லிப் புறப்பட்டு,
- 25 : கர்மேல் பர்வதத்திலிருக்கிற தேவனுடைய மனுஷனிடத்திற்குப் போனாள்; தேவனுடைய மனுஷன் தூரத்திலே அவளை வரக்கண்டு, தன் வேலைக்காரனாகிய கேயாசியைப் பார்த்து: அதோ சூனேமியாள் வருகிறாள்.
- 26 : நீ அவளுக்கு எதிர்கொண்டு ஓடி, நீ சுகமாயிருக்கிறாயா? உன் புருஷன் சுகமாயிருக்கிறானா? அந்தப் பிள்ளை சுகமாயிருக்கிறதா என்று அவளிடத்தில் கேள் என்றான். அவள்: சுகந்தான் என்று சொல்லி,
- 27 : பர்வதத்திலிருக்கிற தேவனுடைய மனுஷனிடத்தில் வந்து, அவன் காலைப் பிடித்துக்கொண்டாள்; அப்பொழுது கேயாசி அவளை விலக்கிவிட வந்தான்; தேவனுடைய மனுஷன்: அவளைத் தடுக்காதே; அவள் ஆத்துமா துக்கமாயிருக்கிறது; கர்த்தர் அதை எனக்கு அறிவியாமல் மறைத்துவைத்தார் என்றான்.
- 28 : அப்பொழுது அவள், நான் என் ஆண்டவனிடத்தில் ஒரு குமாரனை வேண்டும் என்று கேட்டதுண்டா? எனக்கு அபத்தம் சொல்லவேண்டாம் என்று நான் சொல்லவில்லையா என்றாள்.
- 29 : அப்பொழுது அவன் கேயாசியைப் பார்த்து: நீ உன் இடையைக் கட்டிக்கொண்டு, என் தடியை உன் கையில் பிடித்துக்கொண்டு, வழியில் ஒருவனைச் சந்தித்தாலும் அவனை வினவாமலும், உன்னை ஒருவன் வினவினாலும் அவனுக்கு மறுமொழி சொல்லாமலும்போய், என் தடியை அந்தப் பிள்ளையின் முகத்தின்மேல் வை என்றான்.
- 30 : பிள்ளையின் தாயோ: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றாள்; அப்பொழுது அவன் எழுந்திருந்து அவள் பின்னே போனான்.
- 31 : கேயாசி அவர்களுக்கு முன்னேபோய், அந்தத் தடியைப் பிள்ளையின் முகத்தின்மேல் வைத்தான்; ஆனாலும் சத்தமும் இல்லை, உணர்ச்சியும் இல்லை; ஆகையால் அவன் திரும்பி அவனுக்கு எதிர்கொண்டுவந்து: பிள்ளை விழிக்கவில்லை என்று அவனுக்கு அறிவித்தான்.
- 32 : எலிசா வீட்டிற்குள் வந்தபோது, இதோ, அந்தப் பிள்ளை அவன் கட்டிலின்மேல் செத்துக்கிடந்தான்.
- 33 : உள்ளே போய்த் தங்கள் இருவருக்கும் பின்னாக கதவைப் பூட்டி, கர்த்தரை நோக்கிவேண்டுதல்செய்து,
- 34 : கிட்டேபோய், தன் வாய் பிள்ளையின் வாயின்மேலும், தன் கண்கள் அவன் கண்களின்மேலும், தன் உள்ளங்கைகள் அவன் உள்ளங்கைகளின்மேலும் படும்படியாக அவன்மேல் குப்புறப் படுத்துக்கொண்டான்; அப்பொழுது பிள்ளையின் உடல் அனல்கொண்டது.
- 35 : அவன் எழுந்து, அறைவீட்டில் இங்கும் அங்கும் உலாவி, திரும்பக்கிட்டப் போய் அவன்மேல் குப்புறப்படுத்தான்; அப்பொழுது அந்தப் பிள்ளை ஏழுதரம் தும்மித் தன் கண்களைத் திறந்தான்.
- 36 : அப்பொழுது அவன்: கேயாசியைக் கூப்பிட்டு, அந்தச் சூனேமியாளை அழைத்துக்கொண்டுவா என்றான்; அவளை அழைத்துக்கொண்டு வந்தான்; அவள் அவனிடத்தில் வந்தபோது; அவன், உன் குமாரனை எடுத்துக்கொண்டுபோ என்றான்.
- 37 : அப்பொழுது அவள் உள்ளே போய், அவன் பாதத்திலே விழுந்து, தரைமட்டும் பணிந்து, தன் குமாரனை எடுத்துக்கொண்டு வெளியே போனாள்.
- 38 : எலிசா கில்காலுக்குத் திரும்பிப்போய் இருக்கையில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; தீர்க்கதரிசிகளின் புத்திரர், அவனுக்கு முன்பாக உட்கார்ந்திருந்தார்கள்; அவன் தன் வேலைக்காரனை நோக்கி: நீ பெரிய பானையை அடுப்பிலே வைத்துத் தீர்க்கதரிசிகளின் புத்திரருக்குக் கூழ்காய்ச்சு என்றான்.
- 39 : ஒருவன் கீரைகளைப் பறிக்க வெளியிலே போய், ஒரு பேய்க்கொம்மட்டிக் கொடியைக் கண்டு, அதன் காய்களை மடிநிறைய அறுத்துவந்து, அவைகளை அரிந்து கூழ்ப்பானையிலே போட்டான்; அது இன்னதென்று அவர்களுக்குத் தெரியாதிருந்தது.
- 40 : சாப்பிட அதை ஜனங்களுக்கு வார்த்தார்கள்; அவர்கள் அந்தக் கூழில் எடுத்துச் சாப்பிடுகிறபோது, அதைச் சாப்பிடக்கூடாமல்: தேவனுடைய மனுஷனே, பானையில் சாவு இருக்கிறது என்று சத்தமிட்டார்கள்.
- 41 : அப்பொழுது அவன், மாவைக் கொண்டுவரச்சொல்லி, அதைப் பானையிலே போட்டு, ஜனங்கள் சாப்பிடும்படி அவர்களுக்கு வார் என்றான்; அப்புறம் பானையிலே தோஷம் இல்லாமற்போயிற்று.
- 42 : பின்பு பாகால் சலீஷாவிலிருந்து ஒரு மனுஷன் தேவனுடைய மனுஷனுக்கு முதற்பலனான வாற்கோதுமையின் இருபது அப்பங்களையும் தாள் கதிர்களையும் கொண்டுவந்தான்; அப்பொழுது அவன்: ஜனங்களுக்குச் சாப்பிடக்கொடு என்றான்.
- 43 : அதற்கு அவனுடைய பணிவிடைக்காரன்: இதை நான் நூறுபேருக்கு முன் வைப்பது எப்படி என்றான். அதற்கு அவன்: அதை ஜனங்களுக்குச் சாப்பிடக்கொடு; சாப்பிட்டபிற்பாடு இன்னும் மீதியுண்டாயிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
- 44 : அப்பொழுது அவர்களுக்கு முன்பாக அதை வைத்தான்; கர்த்தருடைய வார்த்தையின்படியே அவர்கள் சாப்பிட்டதுமன்றி மீதியும் இருந்தது.